×

சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப உதவி: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் அவர் இறந்துவிட்டார் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், இலங்கைக்கு சாந்தனை அனுப்ப அனுமதி எப்போது கிடைத்தது என்றானர். அதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கடந்த 22ம் தேதி அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போதே ஏன் அனுப்பவில்லை என்று நீதிபதிகள் கேட்டதற்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஜனவரி 24ம் தேதி சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நகர கூட முடியவில்லை. அதனால், அவரை ஏர் ஆம்பலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்று கூறி சாந்தனின் மருத்துவ அறிக்கைகளையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். மேலும், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும், இதுகுறித்து அறிக்கையை வரும் 4ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

The post சாந்தன் உடலை இலங்கைக்கு அனுப்ப உதவி: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Shanthan ,Sri Lanka ,ICourt ,CHENNAI ,Chandan ,Court ,R. Suresh Kumar ,Kumaresh Babu ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்